Tuesday, November 09, 2004

ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்

திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிற திவ்யப்ரபந்தத்தில் வரும் பல பாடல்களில் காணப்படும் பக்தி ரஸமும் வைகுந்தன் மேல் ஒருவித அதிதீவிர அன்பும் பூரண சரணாகதி தத்துவமும் தமிழில் வெறெந்த பக்தி இலக்கியத்திலும் இவ்வளவு அழகாகவும், எளிமையாகவும் சொல்லப்படவில்லை என்று தோன்றுகிறது. கீழுள்ள ஆண்டாள் பாசுரங்களில் 'நாராயணனே யாதுமாய் நிற்கிறான், அவனே எனக்கு சகலமும்!' என்ற கருத்து எவ்வளவு அருமையாகக் கூறப்பட்டுள்ளது என்று பாருங்கள்!

501@..
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப்*
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்*
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா* உன்தன்னோடு-
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை*
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே*
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்


502@..
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து* உன்-
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து *நீ-
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் *உன் தன்னோடு-
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்


அடுத்து திருப்பாணாழ்வாரின் (நாலாயிரத்தில் அவர் அருளியது பத்து, அத்தனையும் நல்முத்து!) அமலனாதிபிரானில் வரும் 3 அற்புதமான பாசுரங்களைத் தந்திருக்கிறேன். அரங்கனின் பேரெழில் அவர் உள்ளத்தை நிறைத்ததையும், அரங்கன் அவருள் புகுந்து அவரை ஆட்கொண்டதையும், அமுதை ஒத்த அரங்கனைக் கண்டபின் வேறெதையும் காணும் ஆசை அவரை விட்டு அகன்று விட்டதையும் ஆனந்தப் பெருக்கோடு சொல்லியிருக்கிறார்!

931@
பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-
வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-
வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே.


935@..
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே.


936@..
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே.


அடுத்து திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியிலிருந்து, திருவேங்கடமுடையான் தரிசனத்தால் உண்டான பேருவகையோடு எழுதப்பட்ட 2 எளிய பக்திப் பாடல்களைத் தந்திருக்கிறேன்.

1034@
தெரியேன் பாலகனாய்ப்* பலதீமைகள் செய்துமிட்டேன்*
பெரியேனாயினபின்* பிறர்க்கே உழைத்து ஏழையானேன்*
கரிசேர் பூம்பொழில்சூழ்* கனமாமலை வேங்கடவா.,*
அரியே. வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே.


1046@

வந்தாய் என்மனம் புகுந்தாய்* மன்னிநின்றாய்*
நந்தாத கொழுஞ்சுடரே* எங்கள் நம்பீ.*
சிந்தாமணியே* திருவேங்கடம்மேய எந்தாய்.*
இனியான் உன்னை* என்றும் விடேனே.


அடுத்து ஸாம வேதத்தின் சாரம் என்றுணரப்படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து சில பக்திப் பரவசமான பாசுரங்களைக் காணலாம். மாறன் மற்றும் சடகோபன் என்றழைக்கப்பட்ட நம்மாழ்வார் வைகுண்டத்தின் தலைமைத் தளபதியாகக் கருதப்படும் விஸ்வக்ஷேனரின் அவதாரம் என்று கூறுவர். அவர் இப்பூமியில் 35 வருடங்களே வாழ்ந்தார்.

அவரைப் பற்றிய ஒரு சுவையான நிகழ்வு ஒன்று இதோ! நம்மாழ்வார் குருகூரில் வாழ்ந்த காலத்தில், வட இந்தியாவில் இருந்த புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மதுரகவி, அயோத்தியின் தெற்கு வானத்தில் ஒரு அற்புதமான ஒளியைக் கண்டார். அவ்வொளியின் மூலத்தை அறியும் விருப்பத்தில் தெற்கு நோக்கி பயணப்பட்டார். திருவரங்கத்தை அடைந்து இன்னும் சற்றே தெற்கில் உள்ள குருகூரை சென்றடைந்தபோது அவ்வொளி ஒரு புளிய மரத்தடியில் தவமிருந்த நம்மாழ்வாரின் திருமேனியில் கலந்திருப்பது மதுரகவிக்கு புலப்பட்டது! அன்றிலிருந்து, மதுரகவி அங்கேயே தங்கி, நம்மாழ்வாரின் பிரதான சீடராகி நம்மாழ்வர் அருளிய பாடல்களை பதிவு செய்ததும், அவருக்கு தொண்டு புரிந்ததும், நாம் அறிந்ததே.

2956@..
வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி,*
வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*
செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய்குந்தா* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.


3450
வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,
செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே,
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே,
அந்தோ! அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே.


3451
அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனே.


என்றென்றும் அன்புடன்
பாலா

2 மறுமொழிகள்:

Boston Bala said...

இனிய பாடல்கள்; பதிவு. அவ்வப்போது ஒவ்வொரு பாடலையும் மேலும் விவரிக்க வேண்டும்.

enRenRum-anbudan.BALA said...

மூர்த்தி, BOSTON பாலா,
கூடிய விரைவில், இப்பாசுரங்களுக்கு எளிமையான பொருள் விளக்கம் தர முயற்சிக்கிறேன். நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails